நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும்: அமைச்சர் உதயகுமார் அழைப்பு

சென்னை: நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை எண்ணூர் பகுதியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு உணவு பொருட்களை நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் இன்று முதல் 3 நாட்கள் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக முதல்வர் நேற்று முன்தினம் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தி, புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைத்துள்ளார். கல்வி வளர்ச்சிக்கு நாங்கள் தடையாக இல்லை. அதே நேரத்தில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் கட்டாயப்படுத்தி, திணிக்க நினைப்பதை தான் எதிர்க்கிறோம். அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜவில் இணைந்த நயினார் நாகேந்திரன், மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர் அதிமுகவில் சேர வந்தால் அவரை அன்போடு ஏற்றுக்கொள்வோம். அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* இ-பாஸ் முறை விரைவில் ரத்து

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் மக்கள் தளர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இ-பாஸ் நடைமுறை ரத்து செய்வது தொடர்பாக  முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் நல்ல  முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் கூறினார்.

Related Stories: