கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்காலிக தலைமை செயலதிகாரியாக (சிஇஓ) ஹேமங் அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐக்கு முதல்முறையாக 2016ல் சிஇஓ பதவி உருவாக்கப்பட்டு ராகுல் ஜோரி நியமிக்கப்பட்டார். அப்போது பிசிசிஐ தலைவராக மனோகர் ஷஷாங்க், செயலராக அனுராக் தாகூர் இருந்தனர். அதன் பிறகு பிசிசிஐ உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகும், ராகுல் ஜோரி பதவியில் தொடர்ந்தார். காரணம் நீதிபதி லோதா  பரிந்துரைத்த பிசிசிஐ சீர்திருத்த பரிந்துரைகளில் சிஇஓ பதவியும் ஒன்று என்பதால் ராகுல் ஜோரி பதவிக்கு ஆபத்தில்லாமல் இருந்தது. ஆனால் கடந்த நவம்பரில் பிசிசிஐக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்ற பிறகு ராகுல் ஜோரி எந்த நேரத்திலும் நீக்கப்படுவார், அல்லது ராஜினமா செய்வார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ராகுல் தனது ராஜினமாவை மின்னஞ்சல் மூலமாக  பிசிசிஐ நி்ர்வாகிகளுக்கு அனுப்பினார். அவரது ராஜினமா உடனடியாக ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இடைக்கால செயலதிகாரியாக ஹேமங் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துள்ளார். அவர் 2 மாதங்களுக்கு பொறுப்பில் இருப்பார். ஐபிஎல் தலைமை செயல் அலுவலராக (சிஓஓ) 2017ம் ஆண்டு முதல் ஹேமங் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: