சென்னையில் குறையும் கொரோனா மரணங்கள்: பிற மாவட்டங்களில் அதிகரிப்பு; மதுரையில் 2 மடங்கு உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது போன்று, மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இதில் சென்னையில் 1000 முதல் 1500 பாதிப்புகளும், மற்ற மாவட்டங்களில் 2000 முதல் முதல் 3000 வரையிலான பாதிப்புகளும் கண்டறியப்படுகிறது.

குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது போல, மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 8ம் தேதி தமிழகத்தில் 3756 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் 1261 பேருக்கும் மற்ற மாவட்டங்களில் 2495 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே தேதியில் தமிழகத்தில் 64 பேர் மரணம் அடைந்தனர். இதில் சென்னையில் 26 பேரும், மற்ற மாவட்டங்களில் 38 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதேபோன்று கடந்த 9ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் சென்னையில் 23 பேரும், மற்ற மாவட்டங்களில் 42 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்படி கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் மரண எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. கடந்த ஜூலை 4ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1450 கொரோனா மரணங்கள் பதிவாகி இருந்தது. இதில் சென்னையில் மட்டும் 1033 மரணங்களும், மற்ற மாவட்டங்களில் 417 மரணங்களும் பதிவானது. கடந்த 13ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 2032 மரணங்கள் பதிவாகி உள்ளன. இதில் சென்னையில் 1277 மரணங்களும், மற்ற மாவட்டங்களில் 755 மரணங்களும் பதிவாகியுள்ளது.

அந்த வகையில், கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் 582 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் சென்னையில் 244 மரணங்களும், மற்ற மாவட்டங்களில் 338 மரணங்களும் பதிவாகியுள்ளது. குறிப்பாக மதுரையில் மரணங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 4ம் தேதி வரை மதுரையில் மொத்தம் 57 மரணங்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த 10 நாட்களில் மட்டும் மதுரையில் 63 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories: