சமூக இடைவெளியுடன் மழைக்கால கூட்டத்தொடர்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 3ம் தேதிக்கு பதிலாக மார்ச் 23ம் தேதியே முன்கூட்டி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இன்னும் கொரோனா கட்டுப்படுத்தப்படாததால், ஆன்லைனில், வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் எம்பிக்கள் நேரில் பங்கேற்கும் வகையிலேயே நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல, இரு அவைகளும் வழக்கம் போல் ஒரே சமயத்தில் நடத்தப்பட உள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் இரு அவைகளை மாறி மாறி நடத்தும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அரங்கின் போதுமான இட வசதி உள்ள இடத்தில் அவைகள் நடத்தப்பட உள்ளன. அவையில் சமூக இடைவெளி விட்டு எம்பிக்கள் அமர வைக்கப்படுவார்கள். இதற்கான இருக்கை அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. மழைக்கால தொடருக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பாக நடத்தப்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: