தங்கத்துக்கு அடுத்தபடியாக வைரக்கற்கள் பதித்த மாஸ்க்: விலை வெறும் 4 லட்சம் மட்டுமே

சூரத்: ‘மாஸ்க்குகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்று சொல்லும் அளவுக்கு நாள்தோறும் புதுமைகளை புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்க மாஸ்க்கால் புனேக்காரர் அதிர்ச்சி தந்த நிலையில், அடுத்தபடியாக வைரக்கற்கள் பதித்த மாஸ்க்கோடு சூரத் போட்டிக்கு வந்து விட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது கட்டாயமாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக மாஸ்க் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது.  இந்தநிலையில், மாஸ்க்கிலும் விதவிதமான வடிவத்தை கொண்டு வர ஆரம்பித்து விட்டனர். முதலில் உடைக்கு ஏற்றார் போல் கலர் கலராக துணி மாஸ்க் வந்த நிலையில், இப்போது விலை மதிப்பற்ற மாஸ்க் தயாரிக்கத் தொடங்கி விட்டனர்.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஒருவர் தங்கத்தினால் ஆன ரூ.2.89 லட்சம் மதிப்பிலான மாஸ்க் அணிந்து ஆச்சரியப்படுத்தினார். அவரை மிஞ்சும் அளவுக்கு தற்போது குஜராத்தின் சூரத்தில் வைரக்கல் பதித்த மாஸ்க்கை நகைக்கடை ஒன்று விற்பனை செய்து வருகிறது.  நான்கு விதமான டிசைன்களில் இந்த மாஸ்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண், பெண் இருவருக்குமான மேட்சிங் ஜோடி மாஸ்குகளும் கிடைக்கின்றன. இந்த ஐடியா எப்படி வந்தது என நகைக்கடை உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறுகையில், ‘‘வாடிக்கையாளர் ஒருவர் தன் வீட்டுத் திருமணத்துக்கு மணமகன், மணமகளுக்கு இந்த வைரம் பதித்த மாஸ்கை பரிசாக அளிப்பதற்காக செய்து கொடுக்கக் கேட்டார்.

எங்கள் வடிவமைப்பாளர்களிடம் இதை தயாரிக்குமாறு கேட்டிருந்தோம். அந்த மாஸ்க் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்ததால், அதையே விற்பனைக்கு கொண்டு வந்து விட்டோம். இது வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பலர் வாங்கிச் சென்றனர். இப்போது பலதரப்பட்ட வடிவமைப்புகளில் தயாரித்து வருகிறோம்’’ என்றார். தங்கம் மற்றும் அமெரிக்க வைரக்கற்களுடன் தயாரிக்கப்படும் மாஸ்க்கின் விலை ரூ.1.5 லட்சம் எனவும், ஒயிட் கோல்டு, சுத்த வைரக்கற்களுடன் தயாரிக்கப்படும் மாஸ்க்கின் விலை ரூ.4 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு நகை வாங்க வரும் பலரும் இந்த மாஸ்க்கை பார்த்து மயங்கிப் போய், நகைக்கு பதிலாக புடவைக்கு மேட்சிங்காக வைர மாஸ்க்கை வாங்கிச் செல்கிறார்களாம்.

Related Stories: