இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது. இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சமயம் இந்த சலுகையினை பெறுவதற்கு வருமான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு இதர பிற்படுத்தப்பட்டோரில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு வருமான வரம்பை கணக்கிடும் போது, மாதாந்திர ஊதியத்தையும், நில வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டிருந்தது.  தற்போதைய மத்திய பாஜக அரசு, வருமான வரம்பை தீர்மானிப்பதில் மாதாந்திர  ஊதியம் மற்றும் நிலத்து வருமானத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென தற்போது முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வஞ்சிக்கப்படும் நிலை உருவாகும்.

 எனவே, மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் மற்றும் நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவினை எதிர்த்து தமிழக மக்கள் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்.

Related Stories: