நாளை முழுஊரடங்கு; உழவர்சந்தை, காய்கறி கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்: வியாபாரம் களைக்கட்டியது

சேலம்: நாளை முழுஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், உழவர்சந்தை, காய்கறி கடைகளில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வியாபாரம் களைக்கட்டியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் நடப்பு ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றையதினம் பால், மருந்துக்கடைகள் தவிர மற்றவைகளுக்கு அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 5ம் தேதி, முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், நாளை 2வது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் இன்று, உழவர்சந்தைகள் மற்றும் காய்கறிக்கடையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் தற்காலிக காய்கறிக்கடைகள், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், ஆத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு இடங்களில் இயங்கும் உழவர்சந்தைகள், காய்கறிக்கடைகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `நாளை முழு ஊரடங்கு என்பதால், இன்று  காலை உழவர்சந்தை, காய்கறிக்கடைகளில் வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்து இருந்தது. வழக்கமாக நடக்கும் வியாபாரத்தில் இருந்து 30 முதல் 40 சதவீதம் அதிகரித்து இருந்தது. தக்காளி தவிர மற்ற காய்கறிகளின் விலை சரிந்து காணப்பட்டது` என்றனர்.

Related Stories: