பொருளாதாரத்தை புரட்டி போட்ட கொரோனா....! வறுமையில் வாடும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும்; சோனியாகாந்தி அறிவுரை

டெல்லி: கொரோனா மற்றும் பொருளாதார பாதிப்பால் வறுமையில் வாடும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார சூழல் தேக்கமடைந்து காணப்படுகிறது. இதேபோன்று, கொரோனாவால் நாட்டில் இதுவரை 8  லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 63% ஆக உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஏற்கனவே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மோசமான நிலை, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குப் பல ஆலோசனைகளைக் கூறினார். மேலும்  பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதங்களையும் எழுதினார். கடைசியாக, மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் கோட்டாவில் இட ஒதுக்கீடு பின்பற்றாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 11 ஆயிரம் இடங்கள் பறிபோனதாகச் சுட்டிக் காட்டி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மாநிலங்களில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள், மத்திய அரசின் நிவாரணப் பணிகள், பொருளாதார நிலவரம்  மற்றும் பல்வேறு  விஷயங்கள் குறித்து அவர் கேட்டறிந்தாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் காங்கிரஸால் எழுப்பப்படும் முக்கிய விஷயங்கள் குறித்தும் அவர் விவாதித்தார். கொரோனா மற்றும் பொருளாதார பின்னடைவால் வறுமையில் வாடும் மக்களுக்குக் காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Stories: