கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் நல்ல பலன்; தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு... சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!!!

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் நல்ல பலனை அளித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6  கட்டங்களாக கடந்த ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற  மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனைகளில்  படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். 5,000 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் தயாராகி வருகிறது என்றார்.

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். கொரோனா சிகிச்சைக்கு சித்த  மருத்துவம் நல்ல பலனை அளித்துள்ளது. சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை ஊக்குவித்து வருகிறோம். சித்த மருத்துவம் மூலம் விரைவாக குணமடைந்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

Related Stories: