சென்னை தனியார் நிறுவன மேலாளர் புதுவையில் உயிரிழப்பு: கொரோனாவால் இறந்தவர் உடலை 12 அடி ஆழ குழியில் வீசிய கொடூரம்

* மனிதாபிமானமற்ற அரசு ஊழியர்கள்

* சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுவையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை சவக்குழியில் அலட்சியமாக வீசுவது போன்று சமூக வலைதளத்தில் வீடியோ உலா வருகிறது.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் (தனியார் கம்பெனி மேலாளர்), ஊரடங்கு காரணமாக புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை பகுதியில் தங்கியிருந்த தனது மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார். திடீரென அங்கு நெஞ்சுவலி ஏற்படவே மயங்கி விழுந்த அவரை மைத்துனர் ராஜசேகர் உள்ளிட்ட உறவினர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். உடனே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

பின்னர் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டதும் உடல் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலன்கடை சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயாராக தோண்டி வைக்கப்பட்டிருந்த 12 அடி குழியில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே, இறந்தவரின் உறவினர்கள் வில்லியனூர் காவல்நிலையம் வரை சென்று போலீசில் புகார் அளித்ததுடன், பலரை சந்தித்துள்ளதால் அவர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில், சென்னை கொரோனா நோயாளியின் சடலத்தை கோபாலன்கடை சுடுகாட்டில் 12 அடி ஆழ சவக்குழியில் அலட்சியமாக தூக்கி வீசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில்  வரைலாக பரவி வருகிறது.

வழக்கமாக கயிறு கட்டி சடலத்தை குழிக்குள் இறக்குவார்கள். ஆனால், கொரோனா பாதித்தவரின் சடலத்தை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்த அரசு ஊழியர்கள், குழிக்கு பக்கத்தில்

வைக்கின்றனர். பின்னர். குழிக்குள் அப்படியே சடலத்தை வீசுகின்றனர். இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்தவரை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யாமல், மனிதாபிமானமற்ற வகையில் இப்படி அரசு ஊழியர்கள் செயல்பட்டதற்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது 12 அடி ஆழம் கொண்ட பள்ளத்தின் அருகே உயிரிழந்தவரின் உடலை கொண்டு சென்றபோது ஊழியர் ஒருவரது கை நழுவியதால் உடல் உருண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது. குறிப்பாக, புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வது இதுவே முதன்முறை என்பதால், ஊழியர்கள் அச்சம் கொண்டதால் நடந்திருக்கலாம். இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக்கூறினர்.

Related Stories: