உறங்கும் கண்காணிப்பு படைகள்; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படுமா?.. வாரி சுருட்டும் ஊழியர்களால் குடிமகன்கள் அதிர்ச்சி

நாகர்கோவில்: டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டருக்கு ரூ.25 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது என குடிமகன்கள் புலம்புகிறார்கள். கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் மே 7ம் தேதி, டாஸ்மாக் கடைகள் திறந்தன. ஆனால் சமூகவிலகலை கடைபிடிக்க வில்ைல என்பதை காரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடந்த மே 16ம்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறை வந்தது. ஆனால் இப்போது டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இல்லை. பணப்புழக்கம் இல்லாததால், விற்பனையும் குறைந்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் மது வகைகளின் விலையை தமிழக அரசு உயர்த்தியும் உள்ளது. குவார்ட்டர் ரகங்களுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தி உள்ளனர்.சாதாரண ரகங்களுக்கு ரூ.5ம், பிரிமியம் ரகங்களுக்கு ரூ.20ம் உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது கடைகளில்  சாதாரண ரகங்களுக்கும் ரூ.20 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். இது தவிர எக்ஸ்ட்ரா ரூ.5 கொடுக்க வேண்டி உள்ளது. ஆக மொத்தம் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.25 கூடுதலாக வாங்குகிறார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் மது வகைகள் விற்பனை செய்ய வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஜூன் 25ம் தேதி  மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றத்தில் அரசு தரப்பில் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் விலை பட்டியல் ெவளியே வைக்கப்படும். கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது பற்றி கவலைப்படாமல் ஊழியர்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள்.இது பற்றி கடை பணியாளர்களிடம் கேட்டால், மது வகைகள் இல்லை என கூறி திருப்பி அனுப்புகிறார்கள் என குடிமகன்கள் புலம்புகிறார்கள்.

குவார்ட்டருக்கு 5 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கும்போது லோடு ஏற்று கூலி, இறக்கு கூலி, சேதாரம் ஆகியவற்றுக்கு கொடுக்க வேண்டும் என்றனர். ஆனால் இப்போது ரூ.25 வரை கூடுதலாக  விற்கிறார்கள. இந்த பணம் யாருக்கு செல்கிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் நேரடியாகவே மக்களிடம் கட்டண ெகாள்ளை நடக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்பது தெரிந்தும், ஊழியர்கள் இவ்வளவு தைரியமாக கூடுதல் விலைக்கு மது வகைகளை விற்பனை செய்ய அதிகாரிகளின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் மது வகைகளுக்கு பில் போடப்பட்டு விற்பனை நடக்கிறது. ஆனால் தமிழக அரசு, விலைபட்டியல் மற்றும் பில் அச்சடித்து விற்பனை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலிடம் வரை இந்த பணம் செல்வதால் தான் அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்றும் குமுறுகிறார்கள். பில் கொடுக்காததால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு கடையில் குறைந்த பட்சம் 100 குவார்ட்டர் பாட்டில் விற்பனையாகிறது என்றால், ஒரு பாட்டிலுக்கு ரூ.25 கூடுதல் வைத்து விற்பனை ஆகும் போது ரூ.2500 கூடுதல் வரும். அரசு விலைப்படி ரூ.1000ம் போனால் கூட ரூ.1500 ஊழியர்களுக்கு கிடைக்கிறது.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரைக்கு சராசரியாக ரூ.3 கோடிக்கு மது வகைகள் விற்பனை ஆகும். இதில் குவார்ட்டர் பாட்டில்கள் தான் அதிகமாக விற்பனை இருக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால் கையாடல் பணம் மூலம் டாஸ்மாக் ஊழியர் ஒருவரின் வருமானம் பல மடங்கு உயர்வாக இருக்கும், என்பது குடிமகன்களின் கணக்கு ஆகும். டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் உண்டு. விற்பனை விவரம், தொகை இருப்பை சரி பார்த்தாலே கூடுதல் விலைக்கு விற்பனை என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால் பறக்கும் படைகளும் உறங்குகின்றன. இதற்காக தக்க சன்மானமும் ஊழியர்கள் தரப்பில் மாதந்தோறும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories: