வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

தேனி: தேனி அருகே வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வேலை செய்யவில்லை. டாக்டர்களும் வேறு பல பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக கர்ப்பிணி பராமரிப்பு, தடுப்பூசி  பணிகள், இயல்பான மருத்துவ சிகிச்சை பணி அனைத்தும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. குறிப்பாக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் இங்கு  கர்ப்பிணிகளை பரிசோதிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மருத்துவ பெட்டகமும் பல மருத்துவமனைகளில் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்தில் தேனி மாவட்டத்தில் பெரும் அளவில் தவறுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு  மாத்திரைகள், சத்துப்பொருட்கள் அடங்கிய  இரண்டு பெட்டகங்கள் வழங்கப்பட வேண்டும். பல இடங்களில் ஒரு பெட்டகம் மட்டும் கொடுத்துள்ளனர். ஒரு பெட்டகத்தின் மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் ஆகும். அதேபோல் கர்ப்பிணி பராமரிப்பில் கோட்டை விட்டதால், பல ஆண்டுகளுக்கு பின்னர் சில உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணி இயல்பான நிலைக்கு வரும் வரை கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்’ என்றனர்.

Related Stories: