தமிழகம் முழுவதும் பழமையான 100 திருக்கோயில்களின் தெப்பக்குளங்கள் சீரமைப்பு: ரூ20.62 கோடி மதிப்பீட்டில் தொடங்கின

வேலூர்: வேலூர், காஞ்சிபுரத்தில் 7 கோயில் தெப்பக்குளங்கள் உட்பட மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான திருக்கோயில் தெப்பக்குளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44121 திருக்கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், சமண கோயில்கள் உள்ளன. இதில் 1,586 கோயில்களுக்கு 1,359 குளங்கள் உள்ளன. இதில் 1,291 குளங்கள் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயிலை விட்டு தள்ளி உள்ள 1,068 கோயில் குளங்கள் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும், தூர்ந்து போயும் உள்ளன.

இக்குளங்களை மீட்டெடுத்து ஆணையரின் பொதுநல நிதியின் கீழ் புனரமைக்கும் பணி கடந்த 2002-2003ம் நிதி ஆண்டில் தொடங்கியது. இடையில் இப்பணிகள் நின்று போயிருந்த நிலையில் நடப்பு ஆண்டு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அதன்படி, வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அம்முண்டி அர்த்தநாரீஸ்வரர் கோயில், வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பக்குளங்கள் தலா ரூ20 லட்சத்திலும், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் ரூ80 லட்சத்திலும், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் குளம் ரூ12 லட்சத்திலும்,

உத்திரமேரூர் சாவாக்கம் சொண்புரீஸ்வரர் கோயில், மதுராந்தகம் திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் குளங்கள் ரூ30 லட்சத்திலும், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சங்குதீர்த்தக்குளம் ரூ60 லட்சத்திலும், ரிஷப தீர்த்தக்குளம் ரூ45 லட்சத்திலும், ஆவடி திருவிளிஞ்சிப்பாக்கம் தேவி கருமாரியம்மன் கோயில் குளம் ரூ25 லட்சத்திலும், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் குளம் ரூ20 லட்சத்திலும், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளீஸ்வரர் கோயில் குளம் ரூ12 லட்சத்திலும் சீரமைக்கப்படுகின்றன.

விழுப்புரம் மண்டலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சி நெடி கிராமம் அய்யனாரப்பன் கோயில் குளம், பையூர் தேவகீஸ்வரர் கோயில், செய்யாறு மாசிமக முதலியார் அறக்கட்டளை கோயில், வந்தவாசி வெடால் நீலகண்டேஸ்வரர் கோயில், மேல்மலையனூர் கெங்கபுரம் வரதராஜபெருமாள் கோயில், கள்ளக்குறிச்சி ராவதீரநல்லூர் சஞ்சீவிராயர் கோயில் குளங்கள் தலா ரூ30 லட்சத்திலும், ஆரணி கோதண்டராமர் கோயில் குளம் ரூ25 லட்சத்திலும், உளுந்தூர்பேட்டை ஆமூர் மார்கசகாயேஸ்வரர் கோயில் குளம் ரூ45 லட்சத்திலும்,

கோலியனூர் புத்துமாரியம்மன் கோயில் குளம் ரூ35 லட்சத்திலும் தூர்வாரப்படுவதுடன், சுற்றுச்சுவர், படிகள் சீரமைக்கப்படுகின்றன. இவ்வாறு மாநிலம் முழுவதும் 100 திருக்கோயில் திருக்குளங்கள் ரூ20.62 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகின்றன. அறநிலையத்துறை ஆணையரின் பொதுநிதியில் இருந்து இதற்கான நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: