'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் மரணம் என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர் என புதைக்குழியில் உடல் அலட்சியமாக வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை புதைகுழியில் சுகாதார பணியாளர்கள் அலட்சியமாக வீசி சென்ற நிகழ்வு நெஞ்சை பதற வைக்கும் விதத்தில் உள்ளது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த ஜோதிமுத்து என்பவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஜோதிமுத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவரது உடல் கோபளம்கடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது துளி அளவும் மனிதாபிமானம் இன்றி, 15 அடி ஆழமுள்ள புதைகுழியில் உடலை வீசி சென்ற நிகழ்வு காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இறந்தவருக்கு உறவினர்கள் இருந்தும், இறுதி சடங்குகள் செய்ய யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் அளித்த பேட்டியில், புதுச்சேரியில் முதல் கொரோனா மரணம் என்பதால் ஊழியர்கள் பதற்றத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஊழியர்களின் நடவடிக்கையில் சில குறைகள் இருப்பதாக கூறியுள்ளனர், அதனை தாம் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்போம். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து மேற்கொண்டு இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். ஆதலால் மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்தார்.

Related Stories: