தள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை?ஐசிசி இன்று முடிவு

துபாய்: ஆஸ்திரேலியாவில்  நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பீதி  காரணமாக அடுத்த ஆண்டு அல்லது 2022க்கு தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து இன்று ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஐசிசி நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று காணொலிக்காட்சி மூலம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உலக கோப்பை டி20 போட்டியை திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்துவதா அல்லது 2022ல் நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

2021ல் இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே ஒரே மாதிரியான 2 உலக கோப்பை போட்டிகளை ஒரே ஆண்டில் நடத்துவது சரியாக இருக்காது. மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி 2023ல் இந்தியாவில் நடைபெற உள்ளது. கூடவே  இந்த ஆண்டு இறுதிக்குள்  13வது ஐபிஎல் தொடரையும், அடுத்த 6 மாதத்தில்  14வது சீசனையும் நடத்த வேண்டியுள்ளது. போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கும் விளம்பரதாரர்கள் குவிப்பதில் சங்கடங்கள் உள்ளன.

 எனவே  ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்த முடியவில்லை என்றால் 2022ஆம் ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள்  தான் அதிகம். இன்று நடைபெறும் ஐசிசி நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. பந்தை பளபளப்பாக்க  எச்சிலை பயன்படுத்தக்கூடாது உட்பட பல்வேறு விதிமுறை மாற்றங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்.    

Related Stories: