கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தது. இதனிடையே பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த இக்கட்டான சூழலில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்; மக்கள் வீடுகளிலேயே தனித்திருந்தால் மட்டுமே கொரோனா வைரஸை வெல்லவும், கொல்லவும் முடியும்.

கொரோனா அறிகுறி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் உள்ளிட்ட மாநிலத்தில் அனைத்து தி.மு.க. அலுவலகங்களையும் பயன்படுத்திக்கொள்ள அரசிடம் கூறியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் திமுக கழக உறுப்பினர்கள், நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்று பரிசோதிப்பதற்கான RT PCR என்ற ஆய்வு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா அறிகுறி இருப்பவர்களை மட்டும் பரிசோதிக்காமல் அறிகுறி இல்லாதவர்களையும் பரிசோதிக்கவேண்டும்.

ஏனெனில், அறிகுறியே இல்லாதவர்களால் வைரஸை பரப்ப முடியும் என்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து, பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் போல தனியார் மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடவேண்டும். கொரோனாவை தடுப்பதற்காக அதிக நிதியை ஒதுக்கி, வெண்டிலேட்டர்கள் கொண்ட படுக்கைகளையும், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். இந்த கொரோனா பாதிப்பு சுகாதார, பொருளாதார பேரிடரை காட்டிலும் மிகப்பெரிய சமூக பேரிடராக மாறி இருக்கிறது.

இதனை தமிழக அரசு உணர்ந்து சலுகைகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் கடைகோடி மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதை உறுதிபடுத்தவேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு ஒருமித்த விலையை மாநில முழுவதும் நிர்ணயிக்க வேண்டும். பாரபட்சம் பார்க்காமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும். மக்களின் குறைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குதான் உள்ளது. தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம். இயற்கைக்கும், நோய்களுக்கும் சாதி, மதம், இனம், நாடு, எல்லை என எந்த பாகுபாடும் இல்லை. அதனால், மக்களின் உயிரை பணையம் வைத்து மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்கிவையுங்கள். கொரோனா நோய்தான் நம்முடைய எதிரியே தவிர, அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்ல.

ஒற்றுமையால் மட்டுமே எதையும் வெல்ல முடியும். பிரிவினையால் அல்ல. வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம் என ஆதங்கப்பட வேண்டாம். இது கொரோனாவை எதிர்க்கும் போராட்டம். இந்த ஊரடங்கு சமயத்தில் நிறைய புத்தகங்களை படியுங்கள். பெற்றோர்-பிள்ளைகள் மனம் விட்டு பேசுங்கள். உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி போலியோ, அம்மை போன்ற மிகக்கொடிய நோய்களை வென்ற இந்தியா இந்த கொரோனாவையும் வெல்லும். தன்னம்பிக்கையோடு தனித்திருப்போம்...! விழித்திருப்போம்...! கொரோனாவை வெல்வோம்...!” என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Related Stories: