கொரோனா வைரஸ் பாதிப்பு 2ம் உலக போருக்கு பிறகு உலக நாடுகள் சந்திக்கும் சவாலான நெருக்கடி : ஐ.நா.பொதுச் செயலாளர்

நியூயார்க் : கொரோனா வைரஸ் பாதிப்பு 2ம் உலக போருக்கு பிறகு உலக நாடுகள் சந்திக்கும் சவாலான நெருக்கடி என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 202 நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று வரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,35,587 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,56,917-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து  65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ், கொரோனா வைரஸ் சமூகத்தின் அடித்தளத்தை தாக்கி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு 2ம் உலக போருக்கு பிறகு உலக நாடுகள் சந்திக்கும் மிக சவாலான நெருக்கடி என்று கூறிய அவர், வைரஸ் பாதிப்பு காட்டுத் தீயை போல பரவி வருவதாகவும் குறிப்பிட்டார். வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: