ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம்: அரசின் சட்டத்தை மதிங்க: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தப்பின் முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் தேவைக்காக தமிழகத்தில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தில் உரிய இருப்பு உள்ளதா என்பது குறித்தும், உணவின் தரம், சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினேன் என்றார். அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தியதாக கூறினார்.

அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்ததாக முதல்வர் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது. ஓட்டல்களில் அதிகவிலைக்கு உணவு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். அரசின் சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும். தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

டெல்லி சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன் வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும். 199 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையை தமிழக அரசு அளித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.

Related Stories: