கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமர் நிவாரண நிதிக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி நன்கொடை...ஓ.என்.ஜி.சி.,ரூ.300 கோடி

டெல்லி: சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு மேலாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேரை பாதித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு  35 பேர் உயிரிழந்துள்ளனர். 1547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 124 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார  பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில்,    குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை   சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும்,’ என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நன்கொடை வழங்க கோரி டுவிட்டரில் பதிவிட்ட, சில நிமிடங்களில், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES   நிதியத்திற்கு பணம் செலுத்தத் தொடங்கினர். பலரும் செலுத்திய வண்ணம் உள்ளனர். கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவிக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரதமர் அவசர கால நிவாரண நிதிக்கு, பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., ரூ.300 கோடியும், ஐ.ஓ.சி., ரூ.225 கோடியும், பாரத் பெட்ரோலியம் ரூ.175 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.120 கோடியும் பெட்ரோநெட் எல்.என்.ஜி., ரூ.100  கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில் இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

Related Stories: