டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 67 பேருக்கு கொரோனா உறுதி: ஒரே நாளில் 57 பேருக்கு நோய் கண்டுபிடிப்பு

* தலைமறைவாக இருந்த 125 பேரிடம் சோதனை

* 14 நாள் வெளியே சுற்றியதால் சமூக பரவல் அபாயம்

* மேலும் 616 பேரை தேடும் பணி தீவிரம்

* புதுடெல்லியில் நடந்தமத நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர்.

* இவர்களில் 515 பேர்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

* அதில் 67 பேருக்கு கொரோனா நோய் உறுதி.

* டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்க அரசு வேண்டுகோள்.

சென்னை: புதுடெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 67 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில்  57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 50 பேர் மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். இதனால், தமிழகத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  தற்போது வரை வெளிநாடு சென்று வந்த, நோய் அறிகுறி தென்பட்ட 2,354 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 1977 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 303 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 50 பேர் டெல்லி மத மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 7 பேருக்கு நேற்று காலையில் நோய் கண்டறியப்பட்டது. அதில் 5 பேர் மத நிகழ்ச்சிக்கு சென்றவர்கள். மாலையில் 50 பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 45 பேர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள். இதில் 22 பேர் நெல்லை, 18 பேர் நாமக்கல், 4 பேர் கன்னியாகுமரி, ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களில் 515 பேரை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம். மற்றவர்கள் தேடி வருகிறோம். டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவுவது தடுக்கப்படும். மத நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் டெல்லியிலேயே 400 பேர் தங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால், அவர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு நகரம், மதுராந்தகம், படாளம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், மேடவாக்கம், அச்சிறுப்பாக்கம், கோவளம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன் 25க்கும் மேற்பட்டோர், டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிறகு அனைவரும், விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இவர்கள் அனைவரும் இஸ்லாமிய இயக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர்.

இவர்களில் பலர் செங்கல்பட்டு, தாம்பரம், மேடவாக்கம், திருக்கழுக்குன்றம் பகுதியில் சொந்தமாக மளிகை, சூப்பர் மார்க்கெட், கறி கடைகள் உள்பட பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். டெல்லி சென்று திரும்பிய பின்னர், தங்களது வேலைகளில் இயல்பாக ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலையில் டெல்லி சென்று திரும்பிய 25 பேரையும் கண்டுபிடித்து அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதித்தனர். அவர்களை மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோல, சென்னை பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை பகுதியை சேர்ந்த 19 பேரும் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். இவர்கள் 19 பேரையும் நேற்று பள்ளிக்கரணை போலீசார் மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர், அங்கிருந்து 19 பேரையும், ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர். தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும், கடந்த 24ம் தேதி டெல்லியில் இருந்து பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் திருவிக நகர் பகுதியை சேர்ந்த 2 என மொத்தம் 3 பேர் சென்னை விமான நிலையம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ் அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து வந்த நபர்களில் ஒருவர் தனது வீட்டில் 40 பேரை அழைத்து தொழுகை நடத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது, அதில் கலந்துகொண்ட 40 பேர் யார் யார் என தீவிரமாக கணக்கெடுக்கின்றனர். அதேபோல, புதுப்பேட்டையில் 6 பேர் சிக்கினர். சென்னையில் இருந்து மொத்தம் 66 பேர் டெல்லி சென்றுள்ளனர். அவர்களில், 28 பேர் பிடிபட்டுள்ளனர். மீதம் உள்ள 38 பேரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, திருச்சி, கரூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 198 பேரும், மதுரையில் மதுரையில் 154 பேர் சிக்கினர். நெல்லையில் 22 பேர் சிக்கினர்.

அவர்களில் 17 பேர் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். அதேபோல, நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிலரையும் பிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்களைத் தவிர மீதம் உள்ள பலரையும் பிடித்து மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களை சோதித்த பிறகுதான், யாருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது என்ற விவரம் தெரியவரும். இவர்கள் டெல்லியில் இருந்து வந்த பிறகு கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து தங்கள் பணிகளை கவனித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் சமூக தொற்று ஏற்பட்டு கொரோனா வேகமாக பரவியிருக்கலாம் என்ற பீதி மக்களிடம் உருவாகியுள்ளது. இதனால் தலைமறைவானவர்களைப் பிடித்து பரிசோதனை செய்து உறுதிப்படுத்திய பிறகே மக்களிடம் அச்சம் விலகும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: