போதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், காஸ் தட்டுப்பாடு வராது: எண்ணெய் நிறுவனம் உறுதி

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. எனவே, தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) நிறுவன தலைவர் சஞ்சீவ் சிங் கூறியதாவது:    கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவை போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் இருக்கும் வரையிலும் எந்த வித தட்டுப்பாடும் இன்றி நாட்டின் மூலை முடுக்கில் கூட இவற்றை சப்ளை செய்ய முடியும்.

ஏப்ரல் மாதம் முடிந்த பிறகும் கூட தற்போதைய இருப்பை கொண்டு எளிதாக சமாளிக்க முடியும். தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, எங்களது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால் எரிபொருள் தேவை வெகுவாக குறைந்து விட்டது. விமான பெட்ரோல் தேவை 20 சதவீதம் குறைந்து விட்டது.  ஆனால், சமையல் காஸ் தேவை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுமே சமையல் காஸ் தேவை 2 மடங்கு உயர்ந்து விட்டது.

எனினும், இவற்றை தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்து வருகிறோம். எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றமோ, பீதியோ அடைய தேவையில்லை. சிலர், தட்டுப்பாடு ஏற்படும் எனக்கருதி முன்கூட்டியே சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்ய வேண்டாம், என்றார்.

Related Stories: