ஊரடங்கை மீறி பேருந்து நிலையத்தில் குவியும் பொதுமக்கள்

பள்ளிப்பட்டு: ஊரடங்கு உத்தரவை மீறி பொதட்டூர்பேட்டை  பேருந்து நிலையத்தில் மக்கள் கும்பலாக வருவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில்  அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமின்றி, பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தது. இதனால் காலை நேரங்களில்  பொதுமக்கள் மற்றும் கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட்டமாக பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்றி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாரச்சந்தை திடலை பயன்படுத்தி காய்கனி, இறைச்சி கடைகள் அமைத்து கொடுத்தால் சமூக விலகலை பின்பற்றி பொதுமக்களும் பொருட்கள் வாங்கிச் செல்ல ஏதுவாக இருக்கும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.   

Related Stories: