7 பில்லியன் ஆண்டுகள் வயதான விண்கற்கள்!

நன்றி குங்குமம் முத்தாரம்

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தின் முர்சிசான் பகுதி. அங்கே 1969-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி விண்ணில் ஒரு விண்கல் வெடித்துச் சிதறியுள்ளது. இந்தக் கற்கள்  விண்ணில் உள்ள பால் மண்டலத்தில் நட்சத்திரங்கள் எப்படி உருவாயின என்பதை அறிந்துகொள்ள உதவும் என்கின்றனர் விண்வெணி ஆய்வாளர்கள். மணல் போன்ற இந்தக் கற்கள் சூரியனைவிட பழமையானவையாக இருக்கலாம்; மற்றும் இவை விண்மீன்களுக்கு இடையே சுற்றி வந்த நட்சத்திரத்தின் கற்கள் எனவும் கூறுகின்றனர்.

‘Proceedings of the National Academy of Sciences’ என்ற இதழில், விஞ்ஞானிகள் இவை பற்றி ஆய்வு செய்து, தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். முடிவில் இவை பூமியில் விழுந்த மிக மிகப் பழைய கெட்டியான பொருள் எனக் கூறியுள்ளனர். அத்துடன் இவை குறைந்தது 5-7 பில்லியன் ஆண்டு கள் பழமையானவை எனவும் கூறியுள்ளனர். உண்மையில் இந்த நட்சத்திரத் துகள்கள் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன், சூரிய மண்டலம் உருவானபோது உடைந்திருக்கலாம். இவற்றில் 40 சிறுமணல் போன்ற துகள்களை எடுத்து ஆய்வு செய்தபோது அவை சிலிகான் கார்பைடால் ஆனவை எனவும், வைரத்தைவிட கடினமாய் இருந்ததும் தெரிந்தது. பல பில்லியன் வருடங்களாக இவை தன் நிலைமையை மாற்றிக்கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது.

இவற்றின் மூலக்கூறை வைத்து, வயதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர். சூரியக் கதிர்கள் ஒளி வேகத்தில் பூமிக்கு வந்து இவற்றைத் தாக்கி, ஓட்டை போட இயலுமா எனவும் ஆய்வு செய்கின்றனர். இப்படியான நட்சத்திர தூசிகளுடன் கூடிய விண்கற்கள் அபூர்வம். இதுவரைக்கும் இந்த மாதிரி 70000 கற்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் 5 சதவிகிதம் மணல் போன்ற பொடியைக் கொண்டது.

தொகுப்பு: ராஜிராதா

Related Stories: