சர்வதேச அரங்கில் சாதித்த சாய்னா: இன்று(மார்ச் 17) சாய்னா நேவால் பிறந்ததினம்

இந்திய விளையாட்டு ரசிகர்களா? அட... எப்பப் பார்த்தாலும் தல டோனி, விராத் கோஹ்லின்னு திரிவாங்கப்பா... அது கவாஸ்கர், கபில் காலமாக இருந்தாலும் சரி... சச்சின், சேவக் காலமானாலும் சரி... கிரிக்கெட்டே ரசிகர்களின் ரசனையில் முதலிடம் பெற்றிருந்தது. அதனாலேயே என்னவோ? விளையாட்டின் மற்றப்பிரிவுகளில் போதிய வருமானமின்மை, வரவேற்பின்மை போன்றவற்றால் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு குறைந்து வந்தது. இதையெல்லாம் தாண்டி டென்னிஸ், பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல் என பல பிரிவுகளில் நமது வீரர்கள், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு சிங்கப்பெண்தான் சாய்னா நேவால். முன்னாள் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை.

அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா? 1990ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி, ஹரியானா மாநிலம், ஹிசார் என்ற இடத்தில் ஹர்விர் சிங் நேவால் - உஷாராணிக்கு மகளாக பிறந்தவர் சாய்னா நேவால். இவர் வளரத்தொடங்கியதுமே குடும்பம் ஐதராபாத்துக்கு குடியேறியது. பள்ளிப்பருவத்திலேயே அவரது துறுதுறுப்பான நடவடிக்கைகளை பார்த்து விளையாட்டில் சேர்க்க விரும்பினார் அவரது தந்தை. சாய்னாவின் விருப்பத்தையே கேட்டபோது, அவர் தேர்வு செய்தது பேட்மிண்டனை. உடனே, சிறந்த பயிற்சியாளர் மூலம் பயிற்றுவித்தார். பிரபல இந்திய டென்னிஸ் வீரர் பிரகாஷ் படுகோனிடமும் பயிற்சி பெற்று பட்டை தீட்டிய வைரமாக மின்னினார்.

2006ம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். அதே ஆண்டில் 2 முறை ஆசிய சாட்டிலைட் பேட்மிண்டன் பட்டங்களை கைப்பற்றி அசத்தினார். 16 வயதில் பிலிப்பைன்ஸ் ஓபன் போட்டியிலும் வென்று சர்வதேச அரங்கில் சாதனை வீராங்கனையாக வலம் வந்தார். பின்னர் 2009ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த இந்தோனேசிய ஓபன் போட்டியில், தரவரிசையில் முதலிடம் பெற்ற சீனாவின் லின் வாங்கை வென்று பட்டம் வென்று சர்வதேச அரங்கில் பலரையும் வியப்பால் விழிகள் விரிய வைத்தார். 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். இந்த தொடரின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

சர்வதேச அரங்கில் இவர் படைத்த சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2009ல் அர்ஜூனா விருது, 2010ல் பத்மஶ–்ரீ விருது, 2010ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வழங்கி கவுரவித்தது. தனது கடின உழைப்பு, பயிற்சியால் கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பிடித்தார். பிரகாஷ் படுகோனேவுக்கு பிறகு பேட்மிண்டன் விளையாட்டில், சர்வதேச தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்திய பெண் இவர் மட்டுமே. களத்தில் வெற்றியை எளிதில் விட்டுத்தரவே மாட்டார். இறுதிவரை போராட வேண்டுமென்ற மனநிலையிலே தனது ஆட்டத்தை ரசித்து ஆடி வருகிறார். இதுவரை 628 போட்டிகளில் விளையாடி, 433 போட்டிகளில் வென்றுள்ளார். இவரது வெற்றிப்பயணம் தொடரட்டும்.

கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளையும் மத்திய அரசும், ரசிகர்களும் ஊக்குவிக்கும்பட்சத்தில் இவரைப்போலவே, பல இளமையான வீரர்கள், வீராங்கனைகள் நமக்கு கிடைப்பார்கள். நம் அரசு இனியாவது சிறந்த விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைத்து அனைவரும் பயன்பெறும் வகையில், சிறந்த பயிற்சியாளர்களையும் நியமிக்க வேண்டும். அப்போதுதான் சாய்னா போன்ற பலர், நமக்கு கிடைப்பார்கள்.

Related Stories: