என்பிஆர், என்ஆர்சி.க்கு எதிராக பீகார் பேரவையில் தீர்மானம்

* ‘அம்மா பிறந்த தேதி எனக்கே தெரியாது’

* முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு

பாட்னா: மத்திய அரசின் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றுக்கு எதிராக பீகார் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற  இருக்கிறது.இந்நிலையில், பீகார் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை குறித்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த கோரினார். அப்போது முதல்வர்  பேரவையில் இல்லாததால், சட்டப்பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் ஷரவண் குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, கேள்வி நேரத்துக்கு பின்னர் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி அனுமதி  அளித்தார்.

ஆனால், அவையில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து பேரவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பேரவைக் கூடியதும் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் நிதிஷ் குமார், ‘‘மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு  (என்பிஆர்) செயல்படுத்துவதில் ஒரு குழப்பமும் இருக்காது. அதில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவுகளான, பெற்றோரின் பிறப்பு குறித்த தகவல்களை நீக்கும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். எனக்கே என்னுடைய தாய் எப்போது பிறந்தார்  என்ற விவரங்கள் தெரியாது’’ என்றார்.

மேலும், அவர் ``கடந்த 2010ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையிலேயே தற்போதைய கணக்கெடுப்பு நடத்தப்படும். அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் சாதி வாரிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான புதிய  தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும்’’ என முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து, மதிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவை கூடியது. அப்போது, என்ஆர்சி.க்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக அனைத்து கட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, என்பிஆர் சாதி வாரிய  அடிப்படையில் நடத்தவும் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, புதிய தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: