இந்த நாட்டை தோல்வி அடைய செய்ய வேண்டாம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், டெல்லி முதல்வர் ஆகியோர் டெல்லியில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய முன்வரவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக டெல்லியில் அமைதியற்ற சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: இது மகாத்மா காந்தி, நேரு, படேலின் இந்தியா. எந்த இந்தியராவது இந்த வன்முறையை ஏற்றுக்கொள்வார்களா? டெல்லி மக்கள் மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும். மதரீதியாக நாட்டை பிரிக்க நினைக்கும் அனைத்து முயற்சிகளையும் நாம்  முறியடிக்க வேண்டும். குறையாத வன்முறைகள், கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் நாட்டின் தலைநகரில் கொலை உள்ளிட்டவை இந்த தேசத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றன. வன்முறையை தூண்டியவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் உங்களது விழா, விடுமுறை, உங்களது அரசியல் பாகுபாடுகள், கருத்து  வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையில் உங்களது கட்சியின் தலைவர்களாக இல்லாமல்  இந்த சமூகத்தின் தலைவர்களாக மாற வேண்டும். இதனால் நல்லிணக்கம், அமைதி மற்றும் அகிம்சையை நிலைநாட்ட முடியும். சமூகத்தில் நீங்கள் அனைவரும் வெவ்வெறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். எனவே இந்த நாட்டை தோல்வியடைய செய்துவிடாதீர்கள். சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்காக மத்திய அரசு மற்றும்  டெல்லி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: