தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்: விசாரணை ஆணைய வக்கீல் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம்  விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் தீயசக்திகள் புகுந்து விட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் ஆணையம் முன்பு 25ம் தேதி (நேற்று) ஆஜராகி விளக்கமளிக்க சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியிருந்தார். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி விசாரணை ஆணையம் முன்பு ரஜினிகாந்த் சார்பில் அவரது வக்கீல் இளம்பாரதி ஆஜரானார். அப்போது அவரிடம் சீலிட்ட கவர் ஒன்றை ஆணையம் அளித்தது. அதில், ரஜினி பதிலளிக்க வேண்டிய 7 கேள்விகள்  இடம் ெபற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே ஒரு நபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறுகையில், ரஜினிகாந்த் விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என்று தனது  வழக்கறிஞர் மூலம் விளக்க மனு அளித்திருந்தார். அதில் 2  காரணங்களைக்  குறிப்பிட்டிருந்தார்.

ஒன்று, தான் வருவதால் பொதுமக்களுக்கு  இடையூறு ஏற்படும் என்றும் இரண்டாவதாக, தனது தொழில் நிமித்தமாக ஏற்கனவே  தேதிகள் ஒதுக்கியிருப்பதையும் குறிப்பிட்டிருந்தார். முதல் காரணத்தை  ஆணையம் ஏற்கவில்லை. இதற்கு  முன்னர் பெரிய அரசியல் தலைவர்கள், சினிமா  பிரபலங்கள் ஆஜராகியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல்துறை  தயாராக இருக்கிறது. இரண்டாவது காரணத்தை ஆணையம் ஏற்று, நேற்று மட்டும் அவர் ஆஜராக விலக்கு  அளித்துள்ளது. மீண்டும் விசாரணைக்கான தேதி குறித்து அவருக்கு சம்மன் அனுப்பப்படும். இப்போதைக்கு அவரிடம் கேட்கக்கூடிய கேள்விகளை வழக்கறிஞர் வாயிலாக சீலிட்ட  கவரில் கொடுத்துள்ளோம். அதற்கு அவர் பதில் மனு தாக்கல்  செய்த பின்னர் மீண்டும் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகும்போது அதுகுறித்து விசாரணை  நடத்தப்படும். ரஜினிகாந்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து முழுமையாக விலக்கு  அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதால், இந்த விளக்கத்தை   நாங்கள் தருகிறோம் என்றார்.

Related Stories: