ஓலைச்சுவடிகள் பாதுகாக்க தனி வாரியம் கோரி வழக்கு: தமிழ் வளர்ச்சித்துறை செயலருக்கு நோட்டீஸ்

மதுரை: ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழ் வளர்ச்சித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழர் நாகரீகம், பண்பாடு, வரலாறு, மருத்துவம் மற்றும் கோயில்கள் தொடர்பாக ஏராளமான கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். இவைகள்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளன.  தற்போது ஆன்லைன் மூலம் பழமையான ஓலைச்சுவடிகள் விற்பனை நடந்து வருகிறது.

பல லட்சங்களுக்கு லாபம் ஈட்டுகின்றனர். எனவே, கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க தமிழக அரசுக்கு  உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை செயலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆகியோருக்கு,  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: