இன்ஜினியரிங் படிக்க மாணவர்களிடம் மவுசு குறைகிறதா?: தமிழகத்தில் 33 கல்லூரிகளை மூட திட்டம்: கல்வி நிறுவனங்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால் 33க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. மேலும், பல பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளாக இயங்கப்போவதாக அறிவித்துள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 557 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் பொறியியல் படிப்பில் சேர முடியும். விண்ணப்பித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும் வகையில் பிஇ, பிடெக் படிப்புகள் பரவலாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த ஆண்டு வரை 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால், சுமார் 50 ஆயிரம் இடங்களில் கடந்த ஆண்டு மாணவர்கள் சேரவில்லை. மேலும், தரமான பொறியியல் கல்லூரிகளை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு அந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போனதால், பெரும்பாலான மாணவர்கள் ஏமாற்றமடைந்து கல்லூரிகளில் சேர்வதை தவிர்த்தனர்.

அதேநேரத்தில், அகமதாபாத் ஐஐடியின் முதல்வர் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவினர் அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை குறைவு, ஆசிரியர்கள் ஊதியப் பிரச்னை ஆகியவற்றின் காரணமாக தத்தளித்து வரும் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர், இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் மற்றும், இணைவை புதுப்பிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் விழுந்துவிட்டனர். தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பை புதுப்பிக்க இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த கால அவகாசத்துக்குள் 537 கல்லூரிகள்தான் இணைப்பை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன. 20 கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட விருப்பம் தெரிவித்துள்ளன.

அவற்றில் 7 கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிடவும், 13 கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகளாக இருப்பதை மாற்றி அமைத்துக் கொள்ளவும், 2 கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையை தொடர்வதா வேண்டாமா என்ற முடிவுக்கு வராமல் உள்ளன. இந்த வகை கல்லூரிகள் தற்போது கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப இந்த கல்வி ஆண்டில் புதியதாக 50 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் உயர்கல்வித்துறைக்கு வந்துள்ளன. அவர்களில் 30 பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றித் தர  விருப்ப கடிதம் மற்றும் விண்ணப்பம் கொடுத்துள்ளன.

Related Stories: