கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வருமான வரித்துறை திடீர் சோதனை

சென்னை: கும்மிடிபூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் இரும்பு உருக்காலை, ஆட்டோ மொபைல்ஸ் உதிரி பாகங்கள், கார் உதிரி பாகங்கள், மின் உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்கள், கோழி தீவனம், டயர் தொழிற்சாலை, கெமிக்கல் தொழிற்சாலை, உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம், பாதுகாப்பு வசதி, போக்குவரத்து, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவைகள் சரிவர கட்டுவதில்லை என புகார் எழுந்தது.

இது சம்பந்தமாக தனியார் தொழிற்சாலைகள் போலியாக டாக்குமென்ட் தயார் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே தொடர்ந்து புகார்கள் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்காட் காவல் நிலையம் எதிரே உள்ள ஜெயின் மெட்டல் என்ற தொழிற்சாலையில் நேற்று 10 பேர் கொண்ட  வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென அலுவலகத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: