மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளியின் 2 ஆசிரியர்களுக்கு சிறை: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் நாகராஜ் மற்றும் புகழேந்தி. 50 வயதை கடந்த இவர்கள் தங்களுக்கு கீழ் படிக்கும் மாணவிகளுக்கு 2012 ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இவர்கள் மீது செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் மாணவிகள் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் 2 ஆசிரியர்கள் மீதும் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த 2018ல் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் நான்கு பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு நடந்தது.  அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒரு சாட்சியம் இருந்தாலே போதுமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரண்டு ஆசிரியர்களின் விடுதலையை ரத்து செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் எனவும் உத்தரவிட்டார்.இவர்களுக்கான தண்டனை விவரங்கள் பிப்ரவரி 25ம் தேதி அறிவிக்கப்படும் அப்போது இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.

அதன்படி இருவரும்  நேற்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி,  தண்டனை குறித்தும் ஏதேனும் கூற விருப்பம் உள்ளதா என்று கேட்டார்.அதற்கு பதில் அளித்த முதல் குற்றவாளி நாகராஜ், தன்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் சிக்க வைத்ததாகவும். எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் நான் நிரபராதி என்றும், அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவன் என்றும் தெரிவித்தார். இரண்டாவது  குற்றவாளியான புகழேந்தி, சக ஆசிரியர்களுக்கு இடையே இருந்த போட்டியில் தன்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் சிக்க வைத்ததாகவும் தான் நிரபராதி என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, தண்டனை தொடர்பாக குற்றவாளிகள் தரப்பில் அவரின் வக்கீல்கள் ஆஜராகி தண்டனையை நிறுத்தி வைக்குமாறும், குறைக்குமாறு வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு முதல் குற்றவாளியான ஆசிரியர் நாகராஜீக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 24 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றவாளியான புகழேந்திக்கு 3 ஆண்டு சிறையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, இருவரையும் போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: