5 ஆண்டுக்கும் குறைவான அனுபவம் இருந்தால் சிக்கல்: கல்வி தரத்தை உயர்த்த கல்லூரி ஆசிரியர்களுக்கு ‘செக்’: ஏஐசிடிஇ அடுத்த அதிரடி

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 ஆண்டு அனுபவம் குறைவாக உள்ளவர்கள், 8 பிரிவுகளில் சிறப்பு பயிற்சி முடிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்கள்- மாணவர்கள் விகிதாசாரம் குறித்து ஏஐசிடிஇ அறிவிப்பின்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் வேலை இழந்தனர். இந்நிலையில், மீண்டும் ஆசிரியர்- மாணவர்கள் விகிதாசாரம் குறித்து ஏஐசிடிஇ புதிய அறிவிப்பை வெளியிட்டு 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களை 2 ஆண்டு கால அவகாசத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால், 40 ஆயிரம் பொறியியல் ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுதலை சுக்குநூறாக்கும் வகையில் ஏஐசிடிஇ மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பொறியியல் பட்டதாரி ஆசிரியர்களை கலக்கியுள்ளது.

இதன்படி, பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோரில் எம்இ முடித்து 5 அல்லது அதற்கும்  அனுபவம் குறைவாக இருப்பவர்கள், மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்படி ஊதியம் வழங்கப்பட உள்ளதால், மேற்கண்ட ஆசிரியர்கள் ஒரு சிறப்பு பயிற்சி படிப்பை முடித்தாக வேண்டும். அதில் 8 விதமாக பயிற்சி கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பயிற்சி பெற முதலில் 2 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொண்டு ஒவ்வொரு பயிற்சி கட்டத்துக்கும் தலா 1000 என மொத்தம் 10 ஆயிரம் செலுத்தி பயிற்சியை முடிக்க வேண்டும். இதன் மூலம் தரமான தொழில் நுட்ப கல்வியை கொண்டு வர முடியும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியை முடிக்கும் ஆசிரியர்கள் பண்பை வளர்ப்பது, புதிய கற்றல் முறையை புகுத்துதல், புதிய பாடத்திட்டங்கள் மூலம் ஒருவரிடம் இரு்ந்து மற்றொருவருக்கு அறிவு பரிமாற்றம் செய்வது, போன்றவை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

பயிற்சியை பொறுத்தவரையில், தொழில் நுட்பக் கல்வி மற்றும் பாடத்திட்ட நோக்கில் ஒருங்கிணைப்பை உருவாக்குதல், நிலையான மற்றும் தொழில் முறை நெறிமுறைகள், தகவல் பரிமாற்ற திறன்கள் மற்றும் பரவலான கல்வி அறிவை விதைப்பது, கல்வித் தொடர்பான திட்டங்கள் மற்றும் வெளிப்பாடுகள், தொழில் நுட்ப கல்விக்கான அதிகாரம் அளித்தல் மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான கற்றல் அனுபவம், மாணவர்கள் பற்றிய மதிப்பீடுகள்,உள்ளிட்ட 8 பிரிவுகளில் பயிற்சி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கல்லூரி ஆசிரியர்கள் மனு கொடுத்துள்ளனர்.

அதில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி 100ல் ஒரு கல்லூரிகூட புதிய ஊதியத்தை வழங்கவில்லை. 7வது ஊதியக் குழு தெரிவித்துள்ள ஊதியத்தை வழங்குவது தொடர்பாக எந்த கல்லூரியும் உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்நிலையில், ஆசிரியர்களிடம் இருந்து பயிற்சி என்ற பெயரால் கல்லூரி நிர்வாகத்தினர் 10  ஆயிரம் கேட்பதை தடுக்க வேண்டும். மேலும், கடந்த 6வது ஊதியக் குழுவின் ஊதியத்தை தர மறுத்த கல்லூரிகள் மீது இதுவரை எந்த தண்டனையும் ஏஐசிடிஇ அளிக்கவில்லை. இதனால், பிரமதர் நரேந்திர மோடி இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: