நாடு முழுவதும் 110 இடங்களில் காற்று தரம் ஆய்வு 24 நகரங்களில் காற்றுமாசு சுவாசிக்காத அளவுக்கு மோசம்

சென்னை: நாடு முழுவதும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 110 இடங்களில் காற்று கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு காற்றின் தரத்தினை பொறுத்து, 6 வகைகளாக பிரிக்கப்பட்டு மாசின் அளவு அறிவிக்கப்படுகிறது. அவை, நல்ல நிலையிலான காற்று, ஏற்றுக்கொள்ளும் வகை, இயல்பானநிலை, மோசம், மிகவும் மோசமானநிலை, கடுமையான நிலை ஆகியவையாகும். இதில் நல்லநிலையிலான காற்று குறைவான பாதிப்புகளையும்; ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ள காற்றினால் சுவாசம் சம்பந்தமான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு லேசான பாதிப்பும் ஏற்படக்கூடும். இயல்பான நிலையில் உள்ள காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல், ஆஸ்துமா, இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். மோசமான காற்றை நீண்டநாட்களுக்கு சுவாசிக்கும்போது ஏராளமானோருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்னை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதன்படி நல்லநிலையிலான காற்று திருப்பதியில் (காற்றின் அளவு-50) உள்ளது.மோசமான நிலையிலான காற்று டெல்லி (225), கிரேட்டர் நொய்டா (234) என 24 நகரங்களில் உள்ளது. இயல்பான நிலையிலான காற்று ஆக்ரா (138), அஜ்மீர் (106), உள்ளிட்ட 48 நகரங்களில் உள்ளது. இதேபோல் திருப்திகரமான நிலையில் 36 நகரங்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலவரம் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காற்றுமாசுபாடு அதிகமாகவுள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறுவிதமான நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மின்சாரத்தால் இயங்கும் பஸ்கள் அறிமுகம், அபாயகரமான நச்சுப்புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவு?

தமிழகத்தில் சென்னையில் 4 இடங்களில் உள்ள காற்று கண்காணிப்பு மையங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும் காற்றின் தரம் கண்காணிப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் காற்றின் தரம் 56 என்ற அளவிலும், கோவையில் 67 என்ற அளவிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.

Related Stories: