மார்ச் 26ல் 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகளுக்கு தேர்தல்: மாநிலங்களவையில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பலம் பெறுகிறதா?...காங். பலம் பாதியாக குறையும்

புதுடெல்லி: மார்ச் 26ம் தேதி 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பாஜக பெறும்பான்மை பலம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் பலம் பாதியாக குறைய வாய்ப்புள்ளது. ஒய்எஸ்ஆர் கட்சி பலம் பெறுகிறது. பிரதமர் மோடி 2019ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, மத்திய  பாஜக அரசு ஜம்மு - காஷ்மீரின் 370வது பிரிவை ரத்து செய்தல், குடியுரிமை (திருத்த) சட்டம், முத்தலாக் என்று 2019ல் பல சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மக்களவையில் அசுர பலத்தை கொண்டுள்ள அந்த கட்சிக்கு மாநிலங்களவையில் போதுமான எண்ணிக்கை இல்லை.

பல சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த போதிலும், கூட்டணி கட்சிகள் மற்றும் வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகளின் ஆதரவுடன் சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜக 305 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறாமல் கூட எந்த மசோதாவையும் நிறைவேற்றுகிறது. ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு 82 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை பலத்துக்கு மொத்தமுள்ள 239 உறுப்பினர்களில் 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 82 உறுப்பினர்களை கொண்ட பாஜக, நட்பு கட்சிகளான அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், பிஜேடி, ஒய்.எஸ்.ஆர், டி.ஆர்.எஸ் போன்ற கட்சிகளுடன் ஆதரவுடன் மாநிலங்களவையில் பெரும்பான்மை பலத்தை பெற்று சட்டத்தை கொண்டு வருகிறது. மேற்கண்ட இந்த கட்சிகளில் 19 உறுப்பினர்கள் உள்ளனர்.

2018 டிசம்பரிலிருந்து 7 மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால், மாநிலங்களவையில் அதன் வலிமை குறைய வாய்ப்பு அதிகரித்தது. அதனால், இரண்டாவது முறையாக மோடி அரசு ஆட்சியைப் பிடித்த உடனேயே சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், ஒரு மாநிலத்தில் சம்பந்தப்பட்ட கட்சிக்கு இழப்பு ஏற்பட்டால்கூட, அது மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை பலத்தை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 15 புதிய உறுப்பினர்களை கூடுதலாக (81+15) பாஜக பெறும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக எந்தவொரு மசோதாவையும் எளிதில் நிறைவேற்ற முடியும்.

வேறு எந்தக் கட்சியினது ஆதரவும் தேவையில்லை. ஜூலை 2022ம் ஆண்டுக்குள், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் இருந்து 8 பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலியாகிறது. இருந்தாலும், பாஜக-வின் வலிமை பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஜூலை 2022ம் ஆண்டுக்குப் பிறகு, அசாம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பீகார், கோவா மற்றும் குஜராத் ஆகிய நாடுகளின் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் மாநிலங்களாக உள்ளன. அதனால், குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பாஜக தனது மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரிய இழப்பை சந்திக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் இந்தாண்டில் மட்டும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் முடிகிறது. அவர்களில் 12 பேர் ஏப்ரல் மாதத்திற்குள் பதவிக் காலத்தை நிறைவு செய்கின்றனர். அதனால், 12 காலியிடங்களில் பாதி எண்ணிக்கையை மட்டுமே காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. காரணம், வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறவுள்ள 17 மாநிலங்களில் நடக்கும் 55 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதில், காங்கிரஸ் கட்சிக்கு மாநில சட்டப்பேரவையில் குறைந்த பலமே உள்ளது.

எனவே, காங்கிரஸ் தலைமை யார் யாரை மாநிலங்களவைக்கு அனுப்புவது என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா மூன்று காலியிடங்களும், சட்டீஸ்கருக்கு இரண்டு காலியிடங்களும் இருக்கின்றன. இளைய தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா, ரன்தீப் சுர்ஜேவாலா, ஜிதின் பிரசாதா ஆகியோருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதனால், தற்போது அறிவிக்கப்பட்ட 55 எம்பிக்களை தேர்வு செய்வதில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

மார்ச் 26ம் தேதி நடக்கும் தேர்தலை பொறுத்தமட்டில், மகாராஷ்டிரா, குஜராத், பீகார், மேற்குவங்கத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஒடிசாவில் பாஜக ஒரு சீட் பெறும். அசாமில் காங்கிரஸ் 2 இடத்தை பறிகொடுக்கும். அது பாஜகவுக்கு சாதகமாகும். ராஜஸ்தானில் பாஜக 2 இடங்களை இழக்கும். அது காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கும். மத்திய பிரதேசத்தில் பாஜக ஒரு இடத்தை இழக்கும். சட்டீஸ்கரில் ஒரு இடத்தை பாஜக இழக்கும். அரியானாவில் காங்கிரஸ் ஓர் இடத்தை இழக்கும். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சி 3 இடங்களை கைப்பற்றும். தெலங்கானாவில் மாற்றம் இருக்காது. மேகாலயா, இமாச்சலில் காங்கிரஸ் மீண்டும் ஓரிடத்தை பெறும்.

Related Stories: