நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கள்ளக்காதல் கொலைகள்: கலாச்சார மாற்றங்களால் விபரீத நிகழ்வுகள்

நெல்லை: கலாச்சார மாற்றங்கள் மற்றும் உள்ளங்கையில் உலகம் என்ற கையடக்க கைப்பேசியில் நெட் அதில் புற்றீசல் போல் பெருகியுள்ள ஆபாச இணையதளங்கள் போன்றவைகளால் கள்ளக்காதல் என்ற மிகப்பெரிய சமுதாய சீரழிவு நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சீரழிவில் சிக்குபவர்கள் வயது வித்தியாசமின்றி உள்ளனர். மீசை முளைக்காத சிறுவர்கள் முதல் பல் போன கிழவர்கள் வரை இதில் அடிமையாகிவிடுகின்றனர். பலதரப்பட்ட பெண்களும் இதில் விதிவிலக்கல்ல. இணையதளத்தில் வரும் ஆபாச வெப்சைட்டுகள் மட்டுமின்றி, பேஸ் புக், டிக்டாக், வாட்ஸ்அப் போன்றவைகளும் திசைமாறி செல்ல பலருக்கு வழிவகுக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளம், பேஸ்புக், செயலிகள், வாட்ஸ்அப் போன்றவைகளை பயன்படுத்தி முறைகேடாக பணம் சம்பாதிப்பது, பெண்கள், ஆண்களை மயக்குவது பார்க்காமலேயே காதலிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இணையதளம் கைபேசியில் உள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்குரலில் பேசி சபல புத்தியுடைய ஆண்களை மயக்கி பணம் கறக்கும் மோசடி கும்பலும் அதிகம் உள்ளன.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலதரப்பினரும்  ஆபாச இணையதளங்களை பார்ப்பதால் கள்ளக்காதல் என்ற வலையில் சிக்குகின்றனர். கள்ளக்காதலர்களுக்கு வயது வித்தியாசம் கிடையாது. ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் கிடையாது. பல நேரங்களில் கள்ளக்காதலியைவிட காதலன் வயது மிக குறைவாக உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. நடுத்தர வயது பெண்கள் தங்களைவிட வயதில் சிறியவர்களிடம் கள்ளக்காதல் மோகத்தில் சிக்குவது சமுதாய சீரழிவை காட்டுகிறது.

இதற்கு உதாரணமாக   தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே புங்கர்வநத்தம் என்ற பகுதியில் சண்முகம் (59) என்ற விவசாயியின் மனைவி 45 வயதான மாரியம்மாள் அதே பகுதியை சேர்ந்த 28 வயது நிரம்பிய ராமமூர்த்தி என்ற வாலிபருடன் கள்ளக்காதல் கொண்டிருந்தார். கடந்த 16ம் தேதி நள்ளிரவு வீட்டு படுக்கையறையில் இருந்த மாரியம்மாள், ராமமூர்த்தி இருவரும் சண்முகத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இதுபோல் கடந்த 20ம் தேதி அழகுராஜன் என்ற ஆலங்குளத்தை சேர்ந்த வியாபாரி கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் கழுகுமலையில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டார். அதே நாளில் விகேபுரம் அருகே உள்ள டானாவை சேர்ந்த தீபா என்ற பெண் சொரிமுத்து என்ற வாலிபருடன் தவறான பழக்கம் ஏற்பட்டு, யோகேஷ் என்ற தனது 4 வயது மகனுடன் நெல்லை விடுதியில் தங்கியுள்ளார். அப்போது அவரது கணவர் மகனின் தொலைபேசியில் பேசியபோது குட்டு வெளிப்பட்டதால் சொரிமுத்து தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சையின்றி 21ம் தேதி குழந்தை யோகேஷ் உயிரிழந்தான். இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகள் நாள்தோறும் நடக்கத்ெதாடங்கவிட்டது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் தீ சுடும் என தெரிந்தும் இந்த தவறுகளை செய்பவர்கள் திருந்தி வாழ வேண்டும். இல்லையேல் இதுபோன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிடும்.

தனிமனித விருப்பம் அதிகரித்ததே காரணம்

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலத்துறை தலைவர் டாக்டர் ராமானுஜம் கூறுகையில், தனி மனித எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் அதிகரித்துவிட்டது. கூட்டுக்குடும்பமாக இருந்தபோது சமூக பொறுப்பு அச்சம், கடமை இருந்தது இது மாறிவிட்டது. தொழில்நுட்ப வசதிகளால் பார்க்கப்படும் ஆபாச பதிவுகளும் தவறான பாதைக்கு இட்டுச்செல்கின்றன. இது மன நோய் அல்ல. ஆனால் உளவியல் சிக்கல் என கூறலாம். இதுபோன்ற மனதடுமாற்றங்கள் ஏற்படுவதை தவிர்க்க கணவன்- மனைவிக்குள் புரிதல் அவசியம். இருவரும் மகிழ்ச்சியாக பேசிட தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கவேண்டும். பணி தவிர்த்து வெளியிடங்களுக்கு இணைந்து சென்று மகிழ்ச்சியாக பொழுதை செலவிடவேண்டும். இதனால் அவர்களுக்குள் உள்ள அன்பு எப்போதும் மாறாது. அதே நேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்காக உணர்ச்சி வேகத்தில் நடத்தப்படும் கொலைகள் ஏற்புடையது அல்ல. ஆளுமை தன்மை அதிகம் இருப்பவர்கள், சமூகவிரோ செயலுக்கு துணிபவர்கள்தான் குழந்தையை கொல்ல துணிகிறார்கள். மனநல டாக்டர்களிடம் உளரீதியான ஆலோசனைகளை பெற்று இதில் இருந்து மீளுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.

Related Stories: