நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் திருப்பதியில் சுலபமாக தரிசிக்க ஏற்பாடு: செயல் அலுவலர் உத்தரவு

திருமலை: நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பாத யாத்திரை பக்தர்கள், ஆதார் அட்டை மூலம் சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், 300 சிறப்பு தரிசன டிக்கட் பெற்ற பக்தர்கள் என நேர ஒதுக்கீடு டிக்கெட் பெறும் பக்தர்கள், தரிசனத்திற்கு செல்லும் நுழைவு வாயிலில் சுலபமாக செல்லும் விதமாக ஏற்பாடு செய்யவேண்டும்.

திருமலையில் பக்தர்களின் வசதிக்காக அமைத்துள்ள இலவச பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். திருமலையை  மேலம் பசுமையாக மாற்றும் விதமாக தோட்டக்கலைத்துறை சார்பில் பணிகளை விரைவில் தொடங்கவேண்டும். மலைப்பாதையில் மேற்கூரை புனரமைக்கும் பணிகளை விரைவாக தொடங்கி பக்தர்களுக்கு சிரமமில்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி, புவனேஸ்வர், விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் கோயில் வளர்ச்சி பணிகளை மேலும் வேகப்படுத்தவேண்டும். உள்ளூர் கோயில்கள், மாணவர்கள் விடுதி, கல்லூரிகளில் பாதுகாவலர்கள் நியமிப்பதோடு, கோயில்களில் பக்தர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் கருவி பொருத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: