அரசு பள்ளி வளாகத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன

நத்தம்: நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்ட துவக்க விழா நடந்தது. விழாவிற்கு திண்டுக்கல் உதவி ஆட்சியர் (பயிற்சி) மதுபாலன் தலைமை வகித்தார். தாசில்தார் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயல்அலுவலர் சரவணக்குமார், வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்.  அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாணவர்களிடம் மரங்கள் வளர்ப்பதற்கான விதை பந்துகளை உதவி ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சடகோபி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னழகர், பள்ளி வளர்ச்சி மேலாண்மை குழு தலைவர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நத்தம் பேரூராட்சி மற்றும் பசுமை வன குழுவினர் செய்திருந்தனர். ஆசிரியர் எல்லாரெட்டி நன்றி கூறினார். முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முதலாக இந்த பள்ளி மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு நடந்து வருவது குறித்து கேட்டறிந்த உதவி ஆட்சியர் அங்குள்ள மழலையர் வகுப்புகளுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மாணவ, மாணவிகளிடம் பாடல்கள் பாடச் சொல்லி அவர்களின் கற்றல் திறன் பற்றி கேட்டறிந்தார். அங்குள்ள ஸ்மார்ட் வகுப்புகளையும், அவற்றில் போதிக்கும் முறைகள் குறித்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி குறித்தும் அவர் கேட்டறிந்தார். 

Related Stories: