கலக்கப்போகும் காபி

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகம் முழுவதும் காபி பிரியர்கள் இருக்கிறார்கள். அதனால் காபி வணிகத்தில் ஈடுபடும் பெரும் நிறுவனங்கள் பில்லியன் டாலர்களில் வருமா னம் ஈட்டுகின்றன. தவிர, அந்த நிறுவனங்களின் காபிக்கடைகள் சங்கிலித் தொடர்போல உலகெங்கும் பரவியிருக்கின்றன. இந்த சங்கிலித் தொடர் காபிக்கடை களில் ஏராளமான காபித்தூள் வீணாகிறது. இதனால் முதலாளி களுக்கு லாபம் குறைவது ஒரு பக்கம் இருந்தாலும், இது சுற்றுச்சூழலுக்குச் சுமையாகவும் மாறிவிடுகிறது.  இதை சீர் செய்யும் நோக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆரிகன் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வில் இறங்கியது. காபித்தூளை வீணாக்காமல், சுற்றுச்சூழலுக்குச் சுமையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் குறைந்த நேரத்தில் காபி தயாரிக்க என்ன செய்யலாம் என்பதே அந்த ஆய்வு.

ஐந்து நாடுகளைச் சேர்ந்த காபி நிபுணர்களுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் மற்றும் கணித மேதைகளும் இந்த ஆய்வில் இறங்கினர். பல மாதங்களாக ஆராய்ச்சி செய்து  காபித்தூளை வீணாக்காமல் காபி போடும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எஸ்பிரஸோ வகை காபியைத் தயாரிப்பதற்கு 20 கிராம் காபித்தூள் தேவைப் படும். இந்தப் புதிய கண்டுபிடிப்பின்படி 15 கிராமே போதுமானது. குறைவாக காபித்தூளைப் பயன்படுத்தினாலுமே கூட 20 கிராம் காபித்தூள் கொடுத்த மணம், சுவை, திடத்தை இந்த புதிய காபி தயாரிக்கும் முறை தருகிறது.

மட்டுமல்ல, காபித்தூளை நைசாக அரைக்காமல், லேசான குருணையாக அரைத்துப் பயன் படுத்தினால் நல்ல மணம் கிடைக்கிறதாம். அத்துடன் எஸ்பிரஸோ இயந்திரத்தில் கொதிக்கும் நீரை 25 வினாடிகளுக்குப் பதிலாக 14 வினாடிக்குள் பாய்ச்சி டிகாக்ஷனை எடுத்துவிடலாம் எனவும் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய காபி சுற்றுச்சூழலுக்கு நன்மையாக இருப்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் காபி நிறுவன முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தைச் சம்பாதித்துத் தரப்போகிறது.

தொகுப்பு: க.கதிரவன்

Related Stories: