கிரிக்கெட் உலகின் பிதாமகன்: இன்று டொனால்டு பிராட்மேன் நினைவுதினம்

ஒவ்வொரு விளையாட்டு போட்டிக்கும் ஒரு தலைசிறந்த வீரரை அடையாளமாக குறிப்பிடுவது உண்டு. அந்த வகையில் கிரிக்கெட்டிற்கு என்று கேட்டால், ஒரே பெயரைத்தான் அனைவரும் உச்சரிப்பார்கள். அவர்தான் சர் டொனால்டு பிராட்மேன். சர்வதேச அரங்கில் டெஸ்டில் சதம் (100) அடிப்பதே சாதனையாக போற்றப்படும் ஆண்டுகளில், சராசரியே சதமாக(99.94) வைத்திருந்தவர் பிராட்மேன். கிரிக்கெட்டின் ‘பிதாமகனான’ பிராட்மேனுக்கு இன்று 19வது நினைவு தினம். அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் நகரில் 1908ம் ஆண்டு, ஆக.27ம் தேதி பிறந்தவர் டொனால்டு பிராட்மேன். 1927ம் ஆண்டு தனது 19 வயதில் கிரிக்கெட் அரங்கில் களமிறங்கிய காலத்தில் இருந்து, ஓய்வு பெற்ற 1949ம் ஆண்டு வரை இவர் எதிரணிக்கு அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாகவே விளங்கினார். வலது கை பேட்ஸ்மேனான இவரது காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருந்தன. ஆனாலும், இவரது ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. எந்த வகை பந்து வீச்சாளர்களையும் எளிதில் சமாளித்து ஆடுவார். பந்து வரும் திசைகளை, இடைவெளி பார்த்து நேர்த்தியாக கணித்து, பவுண்டரிக்கு விரட்டுவதில் பார்ட்டி கில்லாடி. சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் விளையாடிய சாதனைக்காரர் பிராட்மேன்.

52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,996 ரன்கள் குவித்துள்ளார். கடைசி டெஸ்டில் 4 ரன் அடித்தால் அவரது சராசரி 100ஐ தொட்டிருக்கும். ஆனால், இங்கிலாந்திற்கு எதிரான ஓவல் மைதானத்தில் நடந்த தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ‘டக்(0) அவுட்’ ஆனதால், இவரது சராசரி 99.94 ஆனது. ஆனாலும், இது 100 சராசரி என்றே கருதப்படுகிறது. இந்த சாதனையில் 29 சதம், 12 இரட்டை சதம், 2 முச்சதங்கள் அடங்கும். பிராட்மேனுக்கு அடுத்தபடியாக சேவாக், கெய்ல், லாரா ஆகியோர்தான் இரண்டு முச்சதம் அடித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக 6 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். அவரது சராசரி 178.75.

ரன் மெஷினான இவர் பவுண்டரிகளுக்கு பந்தை விரட்டவே அதிகம் விரும்புவார். இறங்கி வந்து தூக்கும் சிக்சர்களை அவர் அதிகம் நேசித்தது இல்லை.

இவரது 6,996 ரன்களில் வெறும் 6 சிக்சர்கள்தான் அடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சச்சின் டெண்டுல்கரை, அடுத்த பிராட்மேன் என கிரிக்கெட் ரசிகர்கள் வர்ணித்தனர். பிராட்மேனும் கூட, சச்சின் தன்னைப்போலவே ஆடுவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து இருவரும்,1998, ஆக.27ம் தேதி சந்தித்தனர். அன்றுதான் டான் பிராட்மேனின் 90வது பிறந்தநாள். அடிலெய்டில் கென்சிங்டன் பார்க்கில் டான் பிராட்மேனின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு, தனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது என பிராட்மேன் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

பிராட்மேன் மறைந்து 8 ஆண்டுகளுக்கு பின், 2009ம் ஆண்டு ‘ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆப் பேமில்’ இடம் பெற்றார், மேலும், நைட்வுட் விருது வழங்கப்பட்ட முதல் ஆஸ்திரேலிய வீரரும் பிராட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ஆடிய காலத்திலும், அதற்கு பிறகும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த சர் டொனால்டு பிராட்மேன், 2001, பிப்.25ம் தேதி அடிலெய்டில் உள்ள தனது வீட்டில் 93வது வயதில் உயிரிழந்தார். சராசரியை போலவே, வாழ்க்கையிலும் சதம் அடிப்பார் என காத்திருந்த பிராட்மேனின் ரசிகர்களுக்கு, இது அதிர்ச்சிகரமான செய்தியாகவே அமைந்தது. மறைந்தாலும் கூட ‘கிரிக்கெட் உலகின் பிதாமகன்’ என்றுதான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: