சவரன் 33 ஆயிரத்தை தாண்டியது

* ஒரே நாளில் 752 அதிகரிப்பு * ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஜெட் வேகத்தில் ஏறி சவரனுக்கு 752 அதிகரித்து, சவரன் 33,328க்கு விற்கப்பட்டது. ஒரு ஆண்டில் 7,728 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வு நகை வாங்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை இந்தாண்டு புத்தாண்டு முதல் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது.அதாவது, கடந்த 17ம் தேதி ஒரு சவரன் 31,216க்கும், 18ம் தேதி சவரன் 31,408, 19ம் தேதி 31,720, 20ம் தேதி ₹31,824, 21ம் தேதி ₹32,408க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (22ம் தேதி) கிராமுக்கு ₹21 அதிகரித்து, ஒரு கிராம் ₹4,072க்கும், சவரனுக்கு ₹168 அதிகரித்து ஒரு சவரன் 32,576க்கும் விற்கப்பட்டது. 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே ஞாயிற்றுக்கிழமை தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. ஆனால், தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் “ஜெட்” வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ₹94 அதிகரித்து ஒரு கிராம் ₹4166க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ₹752 அதிகரித்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 328க்கு விற்றது. ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அதிரடியாக சவரன் ₹752 அளவுக்கு உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹2,112 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஒரு சவரன் ₹25,600க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் (நேற்று வரை) மட்டும் சவரன் ₹7728 அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால், விரைவில் சவரன் ₹ 35 ஆயிரத்தை எட்டும் என்று தெரிகிறது. இந்த மாதத்தில் அதிக அளவில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே, நகைக்காக பணத்தை சிறுக, சிறுக சேர்த்து வைத்தவர்கள் விலை உயர்வால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கூடுதல் தொகைக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும், இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் பல நாடுகளுக்கு தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, ெதன்கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே, பரவியுள்ள சில நாடுகளில், ெகாரோனா வைரஸின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது. இதனால், தொழில் சார்ந்த பங்குகள் மிகவும் தாழ்வான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் தொழிற்சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்த்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் ஒவ்ெவாரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டிக்கொண்டு தான் இருக்கும். இந்த விலை உயர்வு என்பது இன்னும் ஒரு மாதங்களுக்கு நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தங்கம் விலை உயர்வால் நகைக்கடைகளில் சுமார் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் அளவுக்கு விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: