சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா

* சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

* 72 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை: ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது உருவ சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிரமாண்ட கேக் வெட்டப்பட்டு, தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா நேற்று அதிமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின்  சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கட்சி நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொண்டர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் இனிப்பு வழங்கினர்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட முதல் பிரதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். விழாவில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 72 கிலோ எடை கொண்ட கேக்கினை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வெட்டினர். தொண்டர்கள், பொதுமக்களுக்கு இந்த கேக் வழங்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 14 அதிமுக தொண்டர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் என மொத்தம் 28 லட்சம் வழங்கப்பட்டது. அதேபோன்று அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 109 பேருக்கு தலா 1 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடியே 9 லட்சம் குடும்ப நல நிதியுதியாக வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமும் நடைபெற்றது. அதிமுக கலை இலக்கிய அணி சார்பில் 2000 பேருக்கு உணவு, இலவச வேஷ்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இலக்கிய அணி செயலாளர் வளர்மதி, கலை இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: