சட்டவிரோதமாக பயிற்சி வகுப்புகள் போலி ஓமியோபதி சான்று வழங்கியவர் கைது

சென்னை: தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் ஆவுடையப்பன் மற்றும் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அதில் போலியான நிறுவனங்களால் சட்டவிரோதமாக ஓமியோபதி வகுப்புகள் ரகசியமாக நடத்தப்படுவதாகவும், அதில் ஓமியோபதி சிகிச்சை அளிப்பதற்கான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. தகுதி வாய்ந்த டாக்டர்கள் மட்டுமே ஓமியோபதி சிகிச்சை அளிக்க முடியும். இது போன்ற வகுப்புகளை அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் நடத்துவது சட்டவிரோதமானது ஆகும். மேலும், ஒரு ஓமியோபதி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 9 தனியார் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகள் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஓமியோபதி பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள், தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் அவர்கள் ஓமியோபதி முறையில் சிகிச்சை அளிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் கனகா திருமேனி என்பவர் ஓமியோபதி மருத்துவமுறை தொடர்பான சிகிச்சை அளிப்பதாகவும், சட்டத்துக்கு விரோதமாக, பாரம்பரிய மாற்று அறுவை சிகிச்சை ஓமியோபதி என்ற தலைப்பில் பாட வகுப்புகள் நடத்துவதாகவும் கவுன்சிலுக்கு புகார் வந்திருக்கிறது. மேலும் அவர் 23ம் தேதி கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு எதிரே உள்ள ஓட்டலில் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகதிருமேனி, பார்த்திபன், கனகஞானகுரு ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 60 போலி சான்றிதழ்கள், பென்ட்ரைவ், மெடிக்கல்கிட், பணம் செலுத்தியதற்கான வங்கி விவரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: