தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை, என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஒவ்வொரு ஆண்டும் தங்க மோதிரம் பரிசாக வழங்கி வருகிறார். இந்த வருடம் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன. ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த 7 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்கமோதிரம் அணிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளை அடிக்கவில்லை. கடன் வாங்கி மூலதனமாக செயல்படுகிறது. 2021 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். நிர்பயா நிதியை பயன்படுத்தி தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது, நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை எதிர்க்கட்சிகள் பாராட்ட மறுக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் உண்மை அல்ல. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை, என்று கூறியுள்ளார்.

Related Stories: