சிஏஏக்கு எதிரான போராட்டத்தை தடைசெய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி வரும் 28ம்தேதி பாஜ பேரணி: மாவட்ட வாரியாக பொறுப்பாளர் நியமனம்

சென்னை: சிஏஏக்கு எதிரான போராட்டத்தை தடை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வருகிற 28ம் தேதி நடைபெறும் பாஜ பேரணியை ஒருங்கிணைக்கும் வகையில், மாவட்ட வாரியாக  பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஏஏ), தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) என்ற மூன்று திட்டங்களை பற்றியும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பிரதமர்  மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் இந்திய குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த ஒரு இஸ்லாமியருக்கு கூட எந்தவித பாதிப்பும் இல்லை என்று மீண்டும், மீண்டும்  தெரிவித்தும், திட்டமிட்டே இஸ்லாமிய மக்களை குழப்புகிறார்கள். எனவே, தமிழகத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் போராட்டங்களை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) பாஜ சார்பில் பேரணி  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பேரணியை ஒருங்கிணைக்க மாநில அளவில் பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மாநில பொது செயலாளர்கள் எம்.முருகானந்தம்,  வானதி சீனிவாசன், துணை தலைவர்கள் எம்.என்.ராஜா, எம்.சுப்பிரமணியன், தேசிய இளைஞர் அணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், சென்னை கோட்ட பொறுப்பாளர் எம்.சக்ரவர்த்தி, மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ்  பி.செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இதேபோல், சென்னையில் நடைபெறும் பேரணியில் முன்னாள் பாஜ தலைவர் இல.கணேசன்,  பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் எம்.சக்ரவர்த்தி,  நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கன்னியாகுமரி-  முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன். சிவகங்கை-தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்  நயினார் நாகேந்திரன். கோவை-மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன். ஈரோடு-  இளைஞர் அணி தேசிய துணை  தலைவர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.இதுதவிர 37 இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்போர் பட்டியலை பாஜ வெளியிட்டுள்ளது.

Related Stories: