கொரோனா வைரஸ், சுங்கவரி உயர்வால் ஏசி விலை 5 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ், சுங்க வரி அதிகரிப்பு, விமான சரக்கு கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால், ஏசி விலை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் மூலப்பொருட்கள் அல்லது உதிரி பாகங்கள் தேவைக்கு சீனாவையே பெருமளவில் நம்பியிருக்கின்றன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நிறுவனங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஒரு சில இடங்களில் இயங்கினாலும், முழு உற்பத்தி இல்லை. ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மருந்து, ஜவுளி, எலக்டரானிக் உற்பத்தி செய்வோர் மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.  மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில் 70 சதவீதத்துக்கு மேல் சீனாவில் இருந்துதான் இறக்குதி செய்யப்படுகிறது. பெரிய டிவிக்கள், சமையலறைக்கு தேவையான பொருட்கள், மைக்ரோவேவ் உட்பட பல சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. தற்போது சீனாவில் உற்பத்தி முடங்கியதால் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் டிவி பேனல் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிகரித்து விட்டது. எனவே, டிவி, மொபைல், ஏசி விலை விரைவில் உயரும் என நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது.

கோடை சீசன் துவங்க உள்ளது. எனவே ஏசி, மின்விறி விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட காரணங்களால் ஏசி விலையை நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளன இதுகுறித்து ஏசி உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக உதிரி பாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனடி தேவைக்கு விமானங்கள் மூலம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்துக்கும் மிக அதிக செலவாகிறது. அதோடு, பிரிட்ஜ் மற்றும் ஏசிக்களில் பயன்படுத்தப்படும் கம்ப்ரசர்களுக்கு சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு உற்பத்தி துறையினருக்கு சவாலான ஆண்டாகவே இருக்கும். ஏசி விற்பனையை பொறுத்தவரை, விற்பனை சீசன் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருக்கும். வீடுகளுக்கான ஏசி விற்பனையில் சுமார் 40 முதல் 45 சதவீதம் இந்த சீசனில்தான் விற்பனையாகிறது.

கம்ப்ரசர்களில் பெரும்பகுதி சீனாவில் இருந்து இறக்குமதியாகிறது. தவிர, தாய்லாந்து, மலேசியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணத்தால், விமானங்களில் போக்குவரத்து கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி செலவு அதிகமாகிறது. கோடை ஏசி தேவை அதிகம் இருக்கும் என்பதால், அதிக கட்டணமாக இருந்தாலும் இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை. ஒரு சில நிறுவனங்கள் ஏசி விலையை 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தி விட்டன. பிற நிறுவனங்களும் விரைவில் விலையை உயர்த்த உள்ளன. விலை உயர்வுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமல்ல, சுங்க வரி உயர்வுமும் முக்கிய காரணம் என்றனர்.

Related Stories: