எர்டிகா ரகத்தில் புதிய 7 சீட்டர் கார்

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு செல்டோஸ் எஸ்யூவி ரக காருடன் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. செல்டோஸ் காருக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்ததாக, கியா சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை, வரும் தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்த சூழலில், அடுத்து ஒரு 7 சீட்டர் எம்பிவி ரக கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதை கியா மோட்டார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுபற்றி கியா மோட்டார் தலைமை செயல் அதிகாரி ஹன் வூ பார்க் கூறுகையில், ‘’இந்திய சொகுசு எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் கார்னிவல் எம்பிவி ரக கார் மாடலை நிலைநிறுத்தி உள்ளோம். கார்னிவல் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மற்றொரு எம்பிவி ரக கார் மாடலை களமிறக்குவது குறித்தும் யோசித்து வருகிறோம்” என்றார்.

புதிய எம்பிவி ரக கார் மாடலானது கியா செல்டோஸ் எஸ்யூவி ரக காரின் கட்டமைப்பு கொள்கையிலேயே உருவாக்கப்படுகிறது. அதே நேரத்தில், பரிமாணத்தில் செல்டோஸ் காரைவிட சற்று பெரிய கார் மாடலாக வெளிவர உள்ளது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி ரக கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் மாடல்களில் தனது புதிய எம்பிவி ரக கார் மாடலை கொண்டு வருவதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் இந்த எம்பிவி ரக கார் கொண்டு வரப்பட உள்ளது. இது, மாருதி எர்ட்டிகாவுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: