வாசனைத் திரவியம் தரும் ரோஜா இதழ்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ரோஜா அத்தர் எனப்படும் ரோஜா நறுமணப் பொருட்கள் ரோஜா பூவிதழ்களை கசக்கி வடிகட்டுவதனால் பெறப்படும் எளிதில் தீப்பற்றக்கூடியதான ரோஜா எண்ணெயிலிருந்தே செய்யப்படுகின்றது. இம்முறை ஆரம்பத்தில் பாரசீகத்திலும் பல்கேரியாவிலுமே வளர்ச்சியடைந்தது. இவ்வாறு ரோஜா எண்ணெய் பெறப்படும்போது உண்டாகும் பக்க விளைபொருளே பன்னீர் ஆகும். இது வெறும் வாசனைத் திரவியமாக மட்டுமில்லாமல் உணவுப் பொருட்களை மணமூட்டவும், சில அழகுசாதன மற்றும் மருத்துவப் பொருட்களின் பகுதியாகவும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சமய நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பண்டைக் காலம் தொட்டே ரோஜா அதன்  நறுமணம், மருத்துவப் பயன்பாடு காரணமாக விலைமதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே, பண்டைய கிரேக்கரும் ரோமானியரும் தங்களது கோதுமை வயல்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம் போன்றே பரந்து விரிந்த அரச ரோஜாத் தோட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கினர். பன்னீர் ஏனைய நறுமணப் பொருட்களை விட மிகவும் வித்தியாசமான மணத்தைக் கொண்டது. இது ஈரானிய சமையலில், குறிப்பாக குலாப்ஜாமூன் போன்ற இனிப்புப் பண்டங்களிலும் தேநீர், உலர்ரொட்டி போன்றவற்றிலும்  பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பால், சர்க்கரை போன்றவற்றுடன் கலந்து பண்டுங் எனப்படும் ஒரு வகை பானம் தயாரிக்கப்படுகிறது.

மேற்கு ஐரோப்பாவில் சில வகையான உயர்தரக் கேக்குகளைச் செய்வதற்குப் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் வனிலா மணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் பரவும் வரையில் அமெரிக்க, ஐரோப்பிய உணவு உற்பத்தியாளர்கள் பன்னீரைக் கொண்டே தமது உணவுப் பொருட்களுக்கு நறுமணமூட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்தியாவில் சிலரால் இயற்கையான நறுமணத்தைப் பெறுவதற்காக பன்னீரை முகத்தில் தெளித்துக் கொள்ளப்படுவதுமுண்டு. மேலும் இந்தியப் பலகாரங்களிலும் ஏனைய உணவுப் பொருட்களிலும் இது பயன்படுத்தப் படுகிறது. இந்தியத் திருமண வைபவங்களின்போது விருந்தினரை வரவேற்பதற்காகவும் பன்னீர் தெளிக்கப்படுகிறது.

Related Stories: