பிப்.5ல் கும்பாபிஷேகம்: தஞ்சை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

*  12 காவல் மையங்கள் அமைப்பு

*  ஏடிஜிபி நேரில் ஆய்வு

தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுபாப்புப் பணிகளைக் காவல் துறைக் கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி ஆய்வு செய்தார். பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தஞ்சையில் 12 காவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் வரும் 1ம் தேதி மாலை தொடங்குகிறது. இதற்காக 110 யாககுண்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. கோயிலில் 27ம் தேதி புதிய கொடிமரம் நடப்பட்டது. நாளை காலை கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயில் மற்றும் மாநகரில் டிஐஜி லோகநாதன், எஸ்.பி. மகேஸ்வரன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தஞ்சை வந்து கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ், தஞ்சை சரகக் டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, தஞ்சை டிஐஜி அலுவலகத்தில் உயர் அலுவலர்களுடன் கூடுதல் டிஜிபி ஜெயர்த் முரளி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்கள் சிரமமின்றி வந்து, சிரமமின்றி செல்ல செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். தஞ்சையில் பாதுபாப்பைப் பலப்படுத்தும் வகையில் கோடியம்மன் கோயில் அருகில், எஸ்.என்.எம். நகர், தொல்காப்பியர் சதுக்கம், தற்காலிக பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், செவ்வப்பநாயக்கன் ஏரி, அண்ணா நகர் சந்திப்பு, டேனியல் தாமஸ் நகர், பாலாஜி நகர், முனிசிபல் காலனி, குழந்தை இயேசு ஆலய பேருந்து நிறுத்தம்,

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி அருகில் ஆகிய 12 இடங்களில் தற்காலிக காவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 உதவி ஆய்வாளர்கள், 26 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, தஞ்சை நகருக்கு வரும் வாகனங்களைச் சோதனை செய்வதற்காக பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், பெரியகோயில் மேம்பாலம், வடக்கு வாசல், கோடியம்மன் கோயில் அருகில், பூக்காரத்தெரு, டேனியல் தாமஸ் நகர், பாலாஜி நகர், கலைஞர் நகர், மங்களபுரம், ஈஸ்வரி நகர் ஆகிய 12 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தலா ஒரு எஸ்.ஐ. தலைமையில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொள்கின்றனர். இந்த தற்காலிகச் சோதனைச் சாவடிகள் குடமுழுக்கு விழா முடியும் வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

தவிர, 3 தற்காலிக பஸ் நிலையங்களில் தலா ஒரு டிஎஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் காவல் ரோந்து பணி மேற்கொள்ள 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 24 மணிநேரமும் மாநகரில் வலம் வருகின்றனர். இப்பணிக்காக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300 போலீசாரும், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 300 க்கும் அதிகமான போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். குடமுழுக்கு விழாவின்போது 4,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். காவல் துறையினருடன் நடத்திய ஆலோசனை கூட்டம் முடிந்ததும் ஏடிஜிபி கலெக்டர் கோவிந்தராவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories: