பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாச படமாக பதிவிறக்கம் செய்து வெளியிட்டதாக கூறி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக திருநாவுக்கரசு சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்த குண்டர் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திருநாவுக்கரசன் உள்ளிட்ட 4 பேரும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமானது, அவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில், பொள்ளாச்சி சம்பவம் மிக கொடூரமான சம்பவமாகவும், பெண்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு அநீதியாகவும் உள்ளது. எனவே இவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சரிதான். இதனை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இதுபோன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வெளியே விட்டால் மேலும் இதனைவிட கொடூர சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே உயர்நீதிமன்றம் அவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை உடனடியாக உச்சநீதிமன்றம் தடை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான் ஐகோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுமா? அல்லது ரத்து செய்யப்படாதா? என்பது தெரியவரும்.

Related Stories: