சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ்: நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அணியும் முகமூடியை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு

பீஜிங்: சீனாவில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அணியும் முகமூடிகளை மிக அதிக விலைக்கு விற்றதாக மருந்துக் கடை ஒன்றுக்கு 4,34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில்  சுகாதாரமற்ற இறைச்சி மூலமாக மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியது.

சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க, ஹூபெய் மாகாணத்தில் பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பஸ், ரயில் என பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, 5 கோடி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பல்வேறு மருத்துவ வசதிகளை மேற்கொண்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை என சீன அரசு கைவிரித்து விட்டது. இந்நோயின் பாதிப்பால் மக்கள் பலியாவது வாடிக்கையாகி விட்டது. இதனிடையே கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு முகமூடிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆன்லைனில் இந்திய மதிப்பில் ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பாக்ஸ் முகமூடிகளை பீஜிங்கில் உள்ள மருந்துக் கடை ஒன்று, 8,700 ரூபாய்க்கு விற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கடையில் ஆய்வு செய்து இதை உறுதி செய்த அதிகாரிகள் 4,34,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3.08 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள்; கடந்த 6 நாட்களில் அதிக விலைக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை விற்றதாக 31 புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: